முன்னர் குமரிக்கண்டத்தில் (கல் தோன்றி மண் தோன்றா காலம் என்று வர்ணிக்கிற அளவுக்கு பழமையான) உலகின் வேறெங்கிலும் மனித ஒழுக்கப்பண்பாடுகளும், நாகரிகங்களும் தோன்றாத காலத்தில் திடமான அரசமைப்போடும், நீதியான சட்டதிட்டங்களோடும், முன்தீர்த்த முறையான கட்டுமான அறிவோடும், நல்வழிகாட்டி இலக்கியங்களோடும் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மாபெரும் மக்கட்கூட்டம் தமிழ் என்ற தலைப்பின்கீழ் ஒன்றிணைந்து வந்தது. அதை நாடு, தேசியம், இனம், சாதி என எப்படிச் சொன்னாலும் பொருந்தும். அவர்கள் பேசி, இயற்றிவந்த மொழியும் தமிழ் என்றே குறிப்பிடப்பட்டது.
இந்த குமரிக்கண்ட நாகரிகம் இன்றைய ஆய்வாளர்கள் வழக்கில் லெமூரியா கண்டம் என்று அழைக்கப்படுகிறது. (உலகிலேயே முதன்முதலாக தோன்றிய, மனித இனத்தின் முன்தோன்றலாகக் கருதப்படும் குரங்கினம் (இன்று முற்றிலும் அழிந்துபோயிற்று) லெமூரியன் என்றே குறிப்பிடப்படுவதை கவனிக்க)
எகிப்தில் கூட்டம் கூட்டமாக திரிந்துகொண்டிருந்த மக்கட்குழுக்களை தன்னுடைய பராக்கிரமத்தால் ஒன்றிணைத்து, முதன்முதலாக அரசமைப்பை உருவாக்கிய ஒரு அயல்நாட்டவனின் பெயர் மன்னன், மென்னன், மெம்னன் என்று எகிப்திய வரலாறு கூறுகிறது. இவனுடைய வழித்தோன்றலாகவே எகிப்திய பேரரசுகள் தோன்றின.
இந்த காலத்தை தமிழ் இலக்கியங்கள்… கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று குறிப்பிடுகின்றன. (ஆனால், இந்திய அரசு தமிழ் பண்பாடு வெறும் 2000 ஆண்டுகளே பழமையானது என்று ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆரியர் வரவிற்கும் பிந்தையதாகும்).
தமிழர் கண்டம் மொத்தத்தில் பெரும்பகுதியை பாண்டிய மன்னனும், மற்ற பகுதிகளை வேற்று சிற்றரசர்கள் ஆண்டுவந்ததாகவும் தெரிகிறது. அந்த காலத்தில் படையெடுப்புகளோ, நாடுபிடிப்புகளோ இருக்கவில்லை.
தமிழர் முன்னர் வாழ்ந்த கண்டம் கடல்கோளினால் பகுதி பகுதியாக அழிக்கப்பட்டது என்று தமிழ் இலக்கியங்கள் விளக்கமாக உரைக்கின்றன. இன்று சுனாமி என்று விளிக்கப்படுகின்ற இந்த (குமரிக்கண்டத்தை விழுங்கிய) கடல்கோள் என்பதைப் பற்றி… இந்திய அரசைத் தவிர, மற்ற எல்லா நிலவியற் ஆய்வுக்களங்களிலும் நமக்கு மிக அதிகமான, வியக்கத்தக்கத் தகவல்கள் கிடைக்கின்றன.
உலகையே உலுக்கிய, உலக வரைபடத்தையே முற்றிலும் மாற்றியமைத்த இந்த கடல்கோள் ஆஸ்திரேலியாவின் (Uluru or Ayers Rock என்று அழைக்கப்படுகின்ற) வியத்தகு ஒற்றைப்பாறை தோன்றுவதற்கும், தனிக்கண்டமாக இருந்த குமரிக்கண்டம் துண்டு துண்டாகி மடகாஸ்கர், தென் ஜார்ஜிய மலைத்தொடர்கள் மற்றும் ஆசியாவோடு இந்தியா என்ற நிலப்பகுதி வந்து முட்டிச்சேர்வதற்கும் காரணமாகியது என்று டிஸ்கவரி சேனல் விளக்குகிறது.
மத்திய தடைக்கடல் மற்றும் தெற்காசியாவின் மேற்பகுதிகளில் கடல்கோளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த டைனோசார்கள் மற்றும் பறவைகளின் எலும்பு எச்சங்களைக் கொண்டு, அவ்வகை உயிரினங்கள் செழிப்பான பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை என்றும், இன்று தரிசாகக் கிடக்கும் அந்த பகுதிகள் ஒருகாலத்தில் செழிப்பாக இருந்திருந்தது என்றும், அப்பகுதிக்கு சீனாவின் கீழ்பகுதியிலிருந்து வரும் மாபெரும் பருவக்காற்றை… கடல்கோளினால் புதிதாக, பூதாகரமாக உருவான இமயமலை தடுத்து தன்மீது பனிமலைகளாக ஆக்கிக்கொண்டதால் மழை பொய்த்து அந்த விலங்குகள் அழிந்துபட்டும், அந்த பகுதிகள் தரிசாகவும் போயின என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தமிழ் நாட்டில் முன்னர் காரோதிமம், ஆதிமம் என்று அழைக்கப்பட்ட பழங்கால விலங்குகள் அந்த கடல்கோளுக்குப் பிறகு… இன்று அறவே உலகத்தில் இல்லை என்று கூறப்படுகின்றது.
இவ்வாறாக, பகுதி பகுதியாக அழிந்துபோன குமரிக்கண்டத்தோடு தமிழர்களின் பொருட்செல்வங்களும், இலக்கியச் செல்வங்களும் போயின. உயிர் தப்பிய பாண்டிய மன்னன் எஞ்சியிருந்த… பெயர்ந்து… புதிதாக அமைந்திருந்த இந்திய நிலப்பரப்பின் தென்கோடியில் (இன்றைய மதுரையில்) தன் மக்களோடு தன் அரசை நடத்தலானான். அவனுக்கு வடக்கே ஏற்கனவே சிற்றரசுகளாக வாழ்ந்துகொண்டிருந்த சேர, சோழ, கொங்கு மன்னர்களைப் போல தானும் அரசாண்டான்.
அதன்பின், சோழ மன்னன் தன் படையெடுக்கும் படலத்தைத் தொடங்கவே தமிழ் இனத்தைப் பற்றிய புகழ் மீண்டும் உலகளவில் பரவத் தொடங்கிற்று. கடல்கடந்து கம்போடியாவிலும், தாய்லாந்திலும் தன் தடங்களைப் பதித்த சோழ மன்னன்… ஆரிய முனிவர் ஒருவர் போதகத்தால் கவரப்பட்டு சிவசமயத்தில் மும்முரமாகி, தன் போர்க்கொலைப் பாவங்களைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு, அந்த முனிவரின் வழிகாட்டுதலின்படி, மக்களைக் கொள்ளையிட்டு தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். நிதியம் பலவீனமடைந்த நேரத்தில், ஆந்திரத்தின் விஜய நகரப் பேரரசால் முற்றுகையிடப்பட்டு சோழப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இவ்வாறாக, உலக வரலாற்றில் பல மாபெரும் முத்திரைகளைப் பதித்திருக்கும் தமிழ் இன நாகரிகம்… புதிதைப் பார்த்து ஏமாறும் தன்னுடைய பேதைமையாலும், மதத்தின் பேரால் அநீதியான பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு துணை போனதாலும் ஆரியர்களுக்குக் கீழ்பட்டனர். (இன்று போலவே) மக்களை ஒன்று கூட்டி வழிகாட்டும் சரியான தலைமை இல்லாததால்… ஒரு மாபெரும் இனத்தின், நாகரிகத்தின், அதன் பண்பாட்டின், உலகத்தில் முதற்தோன்றிய யாவற்றின் பெயருமாக இருந்த தமிழ்… வெறும் ஒரு மொழியின் பெயர் என்றும்… தமிழுணர்வு என்பது வெறும் மொழிப்பற்று என்றும் சிறு கூட்டிற்குள் அடைக்கப்பட்டது; சங்கிலியால் பிணைக்கப்பட்டு… தமிழ் மாநிலம் என்ற சிறு அங்கீகாரத்திற்குள்… தன் பெருமையையும், சிறப்பையும், தொன்மையையும் அழித்து மறைத்த இந்தியத்தின் கைகளுக்குள்ளேயே… தம் மக்களின் தற்குறித்தனத்தால் சிறைப்பட்டுப் போனது.

என்றாலும் அவர்களுக்கு என்றேனும் ஒருநாள் தமிழ் தேசியத்தின் உணர்வு வரும்… தமிழ் இனம் பக்தியிலும், பகுத்தறிவிலும், ஒழுக்கத்திலும், நீதியிலும் பக்குவப்பட்ட…. தன் பழமைமிக்க முதிர்ச்சியை தன்னுள் கொண்ட இனம் என்று ஒருநாள் தன் தமிழன் உணரும்போது…. அவன் தலை உயரும் என்று நம்பி இன்னும் குற்றுயிரும் குலையுயிருமாக… பன்றிக் காய்ச்சலின் கிருமிபோல ஆங்காங்கே ஒட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறது தமிழம்….
தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
01.சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
02.கழகம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
03.பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
04.மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
05.இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)